நோன்பு என்றால் என்ன?
#நோன்பு என்றால் என்ன?
நோன்பு இஸ்லாத்தின் நான்காவது கடமை. அரபி மொழியில் நோன்பு ‘ஸவ்மு’ எனும்
சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும்.
நோன்பு என்றால் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் மறையும் வரை
உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல் உட்பட இன்னும் நோன்பை
முறிக்கும் காரியங்களை விட்டும் ஒருவர் தன்னை தடுத்துக்கொள்வதாகும்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை பர்ழ் அல்ல என்று மறுப்பவன் காபிராகி விடுவதால்
நோன்பு கடமை என்பதை மறுக்கக் கூடாது. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க தவறி விட்டால்
அதனை பின்னர் நிறைவேற்றுவது (கழா செய்வது) கடமை. மாதவிடாய் காரி, பிள்ளைப்பேறு
தொடக்குடையவள், பிரயாணம் காரணமாக நோன்பை விட்டோர் ஆகியோரின் மீது கழா
செய்வது கடமையாகும். ஆனால் பருவமடையாத சிறுவர், சிறுமியர், பைத்தியக்காரர்,
சுகமடைவதை எதிர்ப்பார்க்க முடியாத நிரந்தர நோயாளிகள், தள்ளாத வயதை அடைந்த
முதியவர்கள் ஆகியோரின் மீது உரிய காலத்தில் நிறைவேற்றுவதோ, கழா செய்வதோ கடமையல்ல.
நோன்பைப் பற்றி அல்லாஹ் (அல் குர்ஆன்)
يَا أَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
“ஈமான் கொண்டோரே! நீங்கள் பரிசுத்தமடைவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்குக் கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.” (2:183)
شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدً۬ى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍ۬ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٍ۬ فَعِدَّةٌ۬ مِّنۡ أَيَّامٍ أُخَرَۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ وَلِتُكۡمِلُواْ ٱلۡعِدَّةَ وَلِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَٮٰكُمۡ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
“ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையை பிரித்தறியக் கூடியதாகவும் உள்ள அல் குர்ஆன் அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்தை மேற்கொண்டிருப்பவராகவோ இருப்பின் (அவர் நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு. எனினும் விடுபட்ட நோன்புகளை ரமழான் அல்லாத) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்று விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை (கொடுக்க) நாடுகிறானே தவிர உங்களுக்கு கஷ்டத்தை (கொடுக்க) நாடவில்லை.” (2:185)
நோன்பை பற்றி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) - (அல் ஹதீஸ்)
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களை பேசவேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபடவேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட சிறந்தது. மேலும், எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும் விட்டு விடுகிறார். நோன்பு எனக்கு உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்குகலாகும். (என்று அல்லாஹ் கூறினான்).
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: ஸஹிஹுல் புகாரி 1894
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: திர்மிதி
#நோன்பின்_வகைகள்
1. கடமையான நோன்புகள் (பர்ளான நோன்புகள்)
இவை மூன்று வகைப்படும்:
(அ) ரமழான் மாத நோன்பு
ஒவ்வொரு ஆண்டிலும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியும் நன்மைகளும் பாவமன்னிப்பும் கிடைக்கிறது. இக்கடமையை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவமாகும்.
(ஆ) நேர்ச்சை நோன்புகள்
ஒரு அடியான் தன்னுடைய ஏதேனும் ஒரு தேவையை குறித்து, அத்தேவையை அல்லாஹ் நிறைவேற்றி தந்தால் இத்தனை நாட்கள் நோன்பு நோற்பேன் என்று அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்யும் நோன்புகளை இது குறிக்கும். இதன்படி குறிக்கப்பட்ட அத்தேவை நிறைவேறின், அது முதல் இந்நோன்பை நோற்பது அவ்வடியான் மீது கடமையாகும். ஆனால், அத்தேவை நிறைவேறாவிடில், அதனை நோற்பது அவ்வடியான் மீது கடமையில்லை
(இ) குற்ற பரிகார நோன்புகள்
ஒருவர் குறித்த சில பாவங்களை செய்யும்போது அதற்கான குற்றப்பரிகாரமாக இஸ்லாம் நோன்பு நோற்பதை கடமையாக்கி இருக்கிறது. அவற்றை இது குறிக்கிறது.
உதாரணம்: ஒருவர் சத்தியம் செய்து விட்டு பின்னர் அச்சத்தியத்தை முறித்தால் 10 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது 10 ஏழைகளுக்கு உடையளிக்க வேண்டும் அல்லது ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும்.
அதேபோல், நோன்பு காலத்தில் ஒருவர் சுயநினைவோடு உடலுறவு கொண்டால் ஒரு அடிமையை உரிமையிட வேண்டும் அல்லது தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்றல் வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
2. மேலதிக நோன்புகள்
(அ) சுன்னத்தான நோன்புகள்
இவை ரமழான் மாதம் அல்லாத ஏனைய காலங்களில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களால் நோற்கப்பட்ட அல்லது நோற்குமாறு ஏவப்பட்ட நோன்புகளாகும். இவற்றை நோற்பது ஒவ்வொருவர் மீதும் கடமையில்லை. ஆனால், இவற்றை நோற்பதனால் நிறைய நன்மைகளும் அல்லாஹ்வின் அன்பும், பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் சுன்னத்தை பின்பற்றிய நன்மையையும் கிடைக்கிறது.
உதாரணம்: முஹர்ரம் மாத ஒன்பதாம் பத்தாம் நாட்களில் நோற்கும் ஆஷுராவுடைய நோன்பு.
(ஆ) நபிலான நோன்புகள்
மேற்குறிப்பிட்ட வகைகளை தவிர்த்து ஒரு அடியான் அல்லாஹ்விற்காக நோற்கும் இதர நோன்புகளாகும். நன்மையை நாடியோ அல்லது நாட்டம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியோ இந்த நோன்புகள் நோற்கப்படலாம்.
நோன்பு யார் மீது கடமை?
ஒருவர் மீது நோன்பு கடைமையாவதற்கு பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.
(1) முஸ்லிமாக இருத்தல். (2) பருவ வயதை அடைந்திருதல். (3) சித்த சுவாதீனமுள்ளவராக இருத்தல்.
(4) நோன்பு நோற்க சக்தியுடையவராக இருத்தல். (5) பெண்கள் மாத தீட்டு, பிரசவ தீட்டில் இருந்து பரிசுத்தமாக இருத்தல் வேண்டும்.
(6) தான் வசிக்கும் ஊரில் இருத்தல் (அதாவது பிரயாணத்தில் இல்லாதிருத்தல்)
நோன்பு யாருக்கு கடமை இல்லை?
(1) முஸ்லிம் அல்லாதவர்களுக்கு (2) பருவமடையாத சிறுவர்களுக்கு (3) சித்த சுவாதீனமற்றவர்களுக்கு
(4) நோயாளிகளுக்கு (5) மாத தீட்டு, பிரசவ தீட்டில் உள்ள பெண்களுக்கு (6) பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு.
இதில் (4), (5), (6) ஆகியோர் விட்ட நோன்புகளை பின்னர் களா செய்ய வேண்டும்.
நோன்பின்_பர்ழுகள்?
1. நிய்யத்து வைத்தல்:
நோன்பு நோற்பவர், தாம் நோன்பு நோற்பதாக நிய்யத்து (நிர்ணயம்) செய்வது பர்ழாகும். நிய்யத்தின்றி நோன்பு நிறைவேறாது.
‘இந்த வருட ரமழான் மாதத்தின் ஃபர்லான நோன்பை நாளை நிறைவேற்ற நிய்யத்துச் செய்கிறேன் அல்லாஹுதஆலாவுக்காக’ என்று மக்ரிபிலிருந்து ஸுப்ஹு வரையிலுள்ள நேரத்தில் நிய்யத்துச் செய்வது ஸுன்னத்து. மறுநாள் முற்பகலுக்கு முன்னர் வரை நிய்யத்துச் செய்து கொள்வது கூடும். ஷாபியீ மத்ஹபின்படி நிய்யத்தின் நேரம், மக்ரிபிலிருந்து கிழக்கு வெளுக்கும் வரையிலாகும். கிழக்கு வெளுக்குமுன் நிய்யத்துச்செய்ய மறந்து விட்டோர், ஹனபீ மத்ஹபு இமாமைப் பின்பற்றி முற்பகலுக்கு முன்னர் நிய்யத்துச் செய்து கொள்ளலாம்.
2. தடுத்து கொள்ளல்:
கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் தன்னை தடுத்துக்கொள்ளல். அதாவது, உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் உட்பட எந்த காரியங்களை செய்தால் நோன்பு முறியுமோ அத்தகைய காரியங்களை விட்டும் தன்னை தடுத்து கொள்வதாகும்.
#நோன்பின்_ஸுன்னத்துக்கள்_எவை?
1. ஸஹர் செய்வது.
2. ஸஹர் முடிய ஐம்பது ஆயத்துக்கள் ஓதுவதற்குரிய நேரம் இருக்கும்போது ஸஹர் உணவுண்டு முடிப்பது.
3. பேரீத்தம் பழம் கொண்டு ஸஹர் உணவைத் தொடங்குவது.
4. ஒன்றுமில்லையெனில் ஒரு மிடறு தண்ணீர் கொண்டாவது ஸஹர் செய்வது.
5. சந்தேகமான நேரமாயிருந்தால் ஸஹரை விட்டுவிடுவது.
6. சூரியன் அஸ்தமித்தது திட்டமானவுடன் நோன்பு திறப்பது.
7. நோன்பை பேரீத்தம்பழங் கொண்டு திறப்பது, இல்லாவிட்டால் தண்ணீரைக்கொண்டு திறப்பது.
8. மூன்று பேரீத்தம் பழங்கொண்டு திறப்பது.
9. நோன்பாளிகளைத் தன்னோடு நோன்பு திறக்கச் செய்வது.
10. நோன்பு திறக்கும் நிய்யத்துச் செய்வது (ஸஹரில் உணவு உண்பதால் இடையூறு ஏற்படுமென்றிருந்தால் ஸஹர் செய்வது ஸுன்னத்தல்ல.
11. ஸதகா நன் கொடை, உறவினர்களின் தேவையை நிறைவேற்றுவது.
12. குர்ஆன் ஓதுவது, ரமழான், பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது போன்ற நற்காரியங்களைச் செய்வது.
13. பஜ்ருக்கு முன்னதாக பெருந்தொடக்கை விட்டும் நீங்கிக் குளிப்பது.
14. பொய், புறம், தீய பேச்சுக்கள், சிற்றின்ப எண்ணங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது.
நோன்பு திறக்கும்போது (இஃப்தாரின்போது) கவனிக்க வேண்டியவை
பொழுது மறைந்ததும் தாமதிக்காமல் நோன்பு திறக்கவேண்டும். பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “நோன்பு திறப்பதை விரைவுப்படுத்தும் வரை மக்கள் நன்மையிலிருப்பர்” என்று கூறி உள்ளார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் சஹ்ல் பின் ஸஃத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: ஸஹிஹுல் புகாரி 1957
நோன்பு திறந்த பிறகு கீழ்க்கண்டவாறு கூறுவது ஸுன்னத்து. “அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அப்தர்து ஃபதகப்பல் மின்னி.”
‘இறைவா, உனக்காகவே நான் நோன்பு நோற்றேன். உன்னையே விசுவாசிக்கிறேன். உன் மீதே பொறுப்புச் சாட்டினேன். நீயளித்த உணவாலேயே நோன்பு துறந்தேன். ஆகவே என் நோன்பை அங்கீகரிப்பாயாக.’

Comments
Post a Comment