நல்ல மனோபாவம் முக்கியம்

 

நல்ல மனோபாவம் முக்கியம்

ஒரு தேசத்தில் ஓர் அரசன் இருந்து வந்தான். கூடிய மட்டும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகவே இராஜ்ய பாரத்தை வகித்து வந்தான்.

தான் நடந்து வரும் முறை பிரஜைகளுக்குத் திருப்திகரமாயிருக்கிறதாவென்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது.

தன்னுடைய மந்திரியைக் கூப்பிட்டு “நம் பிரஜைகள் நம்மிடம் என்ன மனோபாவத்துடன் இருந்து வருகிறார்களென்று தெரிந்து எனக்குச் சொல்ல வேண்டும்” என்று சொன்னான்.

அதற்கு மந்திரி “நான் அறிந்து சொல்வதைவிடத் தாங்களே நேரில் அறிந்து கொள்வதுதான் நல்லது. தங்களுக்கு சௌகரியப்பட்ட தினத்தில் மாறு வேஷத்துடன் என்னுடன் ஊருக்குள் வந்தால் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

“அப்படியே ஆகட்டும்” என்று அரசனும் சம்மதித்து ஒருநாள் இருவரும் மாறு வேஷம் தரித்துக்கொண்டு மத்தியான வேளையில் புறப்பட்டு ஊரின் பக்கத்திலிருந்த நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் ஒரு கிழவன், அக்கரையிலிருந்த காட்டுக்குப் போய் அங்கு கிடக்கும் சுள்ளிவிறகுகளை சேகரித்துக் கட்டுக் கட்டாகக் கட்டிக்கொண்டு அன்றைய தினம் சாப்பாட்டை நடத்திவிடலாமென்ற எண்ணத்துடன், தலையில் விறகுக் கட்டைச் சுமந்து கொண்டு அந்த வெயிலில் ஆற்றில் நன்கு சுட்டுக்கொண்டிருக்கும் மணலில் தள்ளாடிக் கொண்டு இக்கரைக்கு வந்து கொண்டிருந்தான்.

இதை அரசன் பார்த்தான்.

“நான் என்ன இராஜ்ய நிர்வாகம் செய்கிறேன்? இக்கிழவன் இவ்வளவு சிரமப்பட்டு காலக்ஷேபம் பண்ணும் நிலையிலல்லவா இருக்கிறார்? ஐயோ பாவம்! இனி இதுமாதிரி இவர் கஷ்டப்படாமல் செய்து கொடுக்க வேண்டும்” என்று அரசன் நினைத்தான்.

அந்த சமயம் அந்தக் கிழவனும் சமீபத்தில் வந்தவுடன் மந்திரி அவனைப் பார்த்து “கிழவரே! நம் ஊர் அரசன் காலமாகிவிட்டாராமே, உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

இதைக் கேட்டவுடன் அந்தக் கிழவன் “நம் மஹாராஜாவா இறந்து விட்டார்? மஹா தார்மிகராச்சே? அவரைப் போல் இனியாரைப் பார்க்க முடியும்?” என்று சொல்லிக் கொண்டே கண்ணில் நீர்வடித்துக் கொண்டு பிரக்ஞையற்றுக் கீழே விழுந்துவிட்டார்.

உடனே மந்திரி சமீபத்தில் போய் அவரை ஆசுவாசம் செய்து “ஏதோ காதில் பட்டதைச் சொன்னேன். இது பிசகு என்று தெரிகிறது. மஹாராஜா சௌக்கியமாகவே இருக்கிறார்” என்றார்.

“அப்படிச் சொல்லுங்கள், அவர் வெகு நாள் தீர்க்காயுஸாயிருந்து நம்மையெல்லாம் நன்கு எப்பொழுதும் போல் பரிபாலித்து வரவேண்டும்” என்று கிழவர் வெகு அன்புடன் சொன்னார்.

அரசன் மந்திரியைப் பார்த்து “எதற்காக நான் இறந்து விட்டதாக அவனிடம் சொன்னீர்?” என்று கேட்டதற்கு “பின்னால் சொல்கிறேன்” என்று மாத்திரம் பதில் சொன்னார்.

அதன் பிறகு ஒரு வீதிவழியாய்ப் போய்க்கொண்டிருக்கையில் அங்கே ஒரு தயிர்க்காரி யௌவனப் பருவத்தில் இருப்பவள் தலையில் தயிர்க்கூடையை வைத்துக் கொண்டு உல்லாசமாகப் பாடிக்கொண்டு வருவதை அரசன் பார்த்தான்.

“நம் இராஜ்யத்தில் இப்படியும் மானம் கெட்டு செருக்குடன் பெண்கள் இருக்கிறார்களா? அவர்களை நன்கு கண்டித்தால்தான் இராஜ்யம் உருப்படும்” என்று நினைத்து வெகு கோபக்களையுடன் அவரை நிமிர்ந்து பார்த்தான்.

அவள் எதையும் கவனிக்காமல் அன்ன நடை நடந்து மெல்ல வந்து கொண்டிருந்தபோது மந்திரி அவளிடம் போய் “நம் ஊர் அரசர் இறந்து விட்டாராமே, உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

அதைக் கொஞ்சம் கூட லட்சயம் செய்யாமல் “யார் செத்தால் எனக்கென்ன? என் தயிர் என்றைக்கும் விற்கும்.” என்று வெகு உதாசீனமாய் பதில் சொன்னாள்.

அதன்பேரில் மந்திரி “நான் விசாரித்ததில் அப்படி ஒன்றுமில்லை. மஹாராஜா சௌக்கியமாக இருப்பதாகத் தெரிகிறது” என்றார்.

அதற்கும் அவள் “எனக்கு இதுதான் விசாரமா?. எப்படியிருந்தால் எனக்கு என்ன?” என்றே பதில் சொல்லிவிட்டாள்.

இப்பொழுதும் அரசன் “ஏன் இப்படிச் சொன்னீர்?” என்று கேட்டதற்கும் “அரண்மனைக்குத் திரும்பிப் போனபிறகு சொல்கிறேன்.” என்றே பதில் சொன்னார், மந்திரி.

பிறகு அரண்மனைக்குப் போன பிற்பாடு அரசனிடம் மந்திரி சொன்னதாவது:

“அந்தக் கிழவன் தங்களிடம் அபிமானம் காட்டினதற்குக் காரணம் தாங்கள் அவனுடைய சிரமதசையைப் பார்த்து அவன் விஷயமாய்த் தங்கள் மனத்தில் அனுதாபம் தோன்றியிருக்கும். அந்தத் தயிர்க்காரியிடம் தங்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டிருந்திருக்கும். இல்லையானால் அவ்வளவு உதாசீனமாய் அவள் பேசியிருக்கமாட்டாள். அவ்விருவர் மனத்திலும் தங்களைப் பற்றி ஏற்பட்ட மனோபாவம் வெளிப்பட வேண்டுமென்பதற்காகவேதான் நான் தாங்கள் இறந்துவிட்டதாகச் சொன்னேன். தங்களுக்கு அவர்கள் விஷயமாக ஏற்பட்ட மனோபாவத்தை அனுசரித்தே அவர்கள் மனோபாவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுதான் அங்கே பிரதிபலிக்கும். ஆகையால் பிரஜைகள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்களென்ற கவலையே வேண்டியதில்லை. நம் மனம் சுத்தமாய் அவர்களுடைய நல்லதையே நாடினதாய் இருக்கும் பக்ஷத்தில் அவர்களும் நம்மிடம் அபிமானத்துடனிருப்பார்கள்”

இவ்விதம் மந்திரி விஷயத்தை எடுத்துச் சொன்னதும் அரசனும் மிகவும் நியாயமென்று ஒப்புக்கொண்டு அது முதல் முன்னைவிட ஊக்கமாகப் பிரஜைகளின் பரிபாலனத்தில் ஈடுபட்டுவந்தான்.

“யாரையாவது நல்லவராக அழைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று யுதிஷ்டிரரிடமும் துரியோதனனிடமும் சொன்னபோது இருவரும் தேடப்போனார்கள்.

யுதிஷ்டிரர் திரும்பி வந்து “எல்லாருமே நல்லவர்களாக இருக்கிறார்களே? யாரை அழைத்து வருவதென்று தெரியவில்லை” என்று சொல்லி விட்டார்.

துரியோதனனும் திரும்பிவந்து “எல்லாருமே துஷ்டர்களாய் இருக்கிறார்களே? அழைத்து வருவதற்கு யாரையும் காணவில்லையே” என்று சொன்னான்.

இவ்விருவருக்கும் நல்ல மனிதராக அழைத்துவர முடியவில்லை என்பது பொதுவாயிருந்த போதிலும், அவர்கள் சொல்லும் காரணங்களிலிருந்து அவர்களுடைய ஸ்வபாவ குணங்களே வெளிப்பட்டனவென்றுதான் தீர்மானம் சொல்லவேண்டும்.

இதிலிருந்தும் நம் மனோபாவனை தான் வெளியில் பிரதிபலிக்கிறதென்பது நன்றாகத் தெரியவருகிறது.

நாம் கண்ணில் பச்சைக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அதை மறந்து, பார்ப்பதெல்லாம் பச்சையாக இருக்கிறதென்று நினைப்பது போலாகும்.

*******
சங்கரன் எழுதிய “ஞானானந்த பாரதி ஸ்வாமிகளின் நீதி மஞ்சரி” நூலில் இருந்து. 

Comments

Popular posts from this blog

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்!

ஊர்ந்து கொண்டிருந்தது.