வெற்றியின் ரகசியம்...! எப்போதும் போல, எல்லோரையும் போல யாரும் இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது எனும்போது, மாற்றம் பெறாத எதுவும், வித்தியாசமாக இல்லாத எவருடைய வாழ்வும் அத்தனை வரவேற்பைப் பெறாது. வந்து போவதில் என்ன இருக்கப் போகிறது என்று வித்தியாசமாக இருப்பவர்களே செய்தியிலும், சரித்திரத்திலும் இடம்பெறுகின்றனர். எப்போதோ படித்தது. ஆப்பிரிக்காவில் அத்தனை அதிகமாய் நாகரிகம் பரவாத நேரம். பிரபலமான செருப்பு நிறுவனம் தன் காலணிகளை அங்கே சந்தைப்படுத்துவதற்காக ஒரு விற்பனைப் பிரதிநிதியை அனுப்புகிறது. போனவன் திரும்பிவந்து தந்த பதில், “அங்கே யாருமே செருப்பு அணியாதபோது, எப்படி செருப்பு விற்பது?” சில மாதங்களுக்குப் பிறகு வேறு ஒரு இளைஞன் சென்றிருக்கிறான். சென்றடைந்த சில நாள்களுக்குள் ஆயிரக்கணக்கான செருப்புகளைத் தருவித்துக் கொண்டதோடு, செருப்பு அணிவது எத்தனைப் பாதுகாப்பானது என்பதை அங்குள்ள மக்களுக்குச் சொல்லிக் கொடுத்ததோடு, சிலருக்கு இலவசமாகவும், சிலருக்குக் குறைந்த விலையிலும் விற்றுச் சந்தைப்படுத்த தொடங்கியதைக் கூறுகிறான். இதுதான் வித்தியாசமாக சிந்திப்பதென்பது...